சென்னை சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65) இவர் கடந்த ஐந்து வருடங்களாக சென்னை சுற்றி பல்வேறு பகுதிகளில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று மாலை வடபழனி பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது வடபழனியில் உள்ள கணேஷ் அவென்யூ பகுதியில் விஜயலட்சுமி என்ற பெண் ரோஜா பூ கேட்டதாகவும் அதனை கொடுப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி அந்த வீட்டருகே சென்றுள்ளார்.
அந்த வீடு இரண்டு மாடி குடியிருப்பு என்பதால் விஜயலட்சுமி முதல் மாடியின் பால்கனியில் இருந்து கயிறு மூலம் பை கீழே கொடுத்து அதன் மூலம் பூ வாங்க முயற்சித்துள்ளார். பூ வாங்கி அந்த கயிறை இழக்கும் பொழுது விஜயலட்சுமி பால்கனி மீது சாய்ந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக திடீரென பால்கனி இடிந்து கீழே நின்று கொண்டிருந்த பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்தது. அதில் சுவர் முழுவதும் அவருடைய மார்பு மற்றும் கால் போன்ற பல்வேறு பகுதிகளில் விழுந்ததில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
பால்கனி கீழே விழுந்து அதிர்ச்சியில் விஜயலட்சுமியும் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு உடற் கூற்வு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விஜயலட்சுமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து ஏற்படும் பொழுது கிருஷ்ணசாமி மட்டும் இருந்ததால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பால்கனி சுவர்கள் கீழே விழுந்ததால் கீழே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் முழுவதும் சேதமடைந்தது.