செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சாஸ்திரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரதீப் வயது 6 அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் தனது இரு சக்கர வாகனத்தில் மகன் பிரதீப்பை அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்க சென்றுள்ளார். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறுவன் பிரதீப் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்த நிலையில் கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்துள்ளார்.
மகன் காணாமல் போனதை அறிந்த மணிகண்டன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் பார்த்தபோது சிறுவன் இறந்து கிடந்த தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த பாலூர் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே கால்நடைகள் திறந்து கிடந்த அந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்துள்ளதாகவும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜியிடம் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததுதான் தற்போது சிறுவன் உயிர் இழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.