விவசாயிகளின் குரலை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பு: காங்கிரஸ்!

விவசாயிகளின் குரலை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் வகையில் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே பிரச்னை உள்ளது. முக்கியமாக உணவுப் பொருள்களின் விலைஉயர்வு தொடர்கதையாக உள்ளது. ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு உணவுதானியங்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறி, பால் என மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் நாளுக்குநாள் உயருகிறது. இவற்றை வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு மக்களின் வருவாய் உயரவில்லை. மறுபுறம் வேலையின்மையும் உச்சத்தில் உள்ளது. இதனால், ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர்.

கரோனாவுக்குப் பிறகு பொருளாதார மீட்சி என்பது முற்றிலும் பணம் படைத்தவர்களுக்கானதாக மாறிவிட்டது. கிராமப்புற பொருளாதாரம்
நசிவடைந்துவிட்டது. மோடி அரசின் விவசாயிகள் விரோத செயல்பாடுகள் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை. திட்டமிடாமல், நியாமற்ற வகையில் வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பது விவசாயிகளின் வருவாயை வெகுவாக பாதித்து வருகிறது. விவசாயிகளின் குரலை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மத்திய அரசின் தவறான வர்த்தகக் கொள்கை நாட்டின் உற்பத்தி துறையை பாதித்துள்ளது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன இறக்குமதி 11 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்ந்துவிட்டது. சீனாவில் இருந்து குவியும் பொருள்களால் உள்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News