சீராய்வு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்!

போபால் விஷவாயுவில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக, 7,844 கோடி ரூபாய் கேட்டு தாக்கல் செய்துள்ள சீராய்வு வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984-ஆம் ஆண்டு 3-ம் தேதி இரவு, யூனியன் கார்பைடு எனும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து திடீரென விஷவாயு கசிந்தது.

இந்த விஷவாயு போபால் நகரம் முழுதும் பரவியதில், 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். Ôலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் சார்பில், 1989ல் 715 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப் பட்டோருக்கு, கூடுதலாக 7 ஆயிரத்து 844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில், 2010ல் சீராய்வு வழக்கு தொடரப்பட்டது.

சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, இந்த சீராய்வு வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிவிக்கும்படி, உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.

நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை தொடர்ந்து நடத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது என, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை, அடுத்தாண்டு ஜன., 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.