மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பையடுத்து, டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால், பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்திருந்தார். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க போராட்டக் குழு, பாஜக மாநில தவைவர் அண்ணாமலை தலைமையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேற்று சந்தித்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும், டங்ஸ்டன் சுரங்க ஏலம் நிறுத்தப்படுவதாகவும் கூறினார். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை ( வியாழக்கிழமை ) வரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டங்ஸ்டன் சுரங்க ஏலம், நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த அரிட்டாப்பட்டி மக்கள், மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.