திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா தென்முடியனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்ய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை இருந்து வந்தது.
குறிப்பாக தென்முடியனூர் கிராமம் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியாக கோவில் அமைத்து கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் தனியாக வழிபாடு செய்து வந்தனர். இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய தாங்களும் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையில் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த இந்து சமய அறநிலைத்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 80 ஆண்டு காலமாக இந்த கோவிலில் வழிபட அனுமதி இல்லாத நிலையே இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் குடியேற போவதாக தெரிவித்தனர். இதனால் தென்முடியனுர் கிராம மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகே 100க்கு மேற்பட்டோர் கூடி இருந்தனர். இதனால் தென்முடியனூர் கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று இரவு முதல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தென்முடியனூர் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தென்மொடியனுர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அனைத்து தரப்பினருக்கும் சமம் என்றும், ஆதலால் அவர்களும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட ஏற்பாடுகள் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அனைத்து தரப்பினருக்கும் சமம் என்றும், குறிப்பிட்ட தரப்பினர மட்டும் வழிபாடு செய்ய இயலாது எனவும், அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யவே தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை தடை விதித்தால் கோவிலை முழுமையாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
கடந்த 80 ஆண்டுகளாக கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யாத தாழ்த்தப்பட்ட மக்களாகிய தாங்கள் இன்று மாவட்ட ஆட்சியருடன் கோயிலுக்குள் சென்று பூஜைகள் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தது தங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.