தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜியின் துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு, சிறிது நேரத்திலேயே உத்தரவை நிறுத்தி வைத்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சரை நீக்கியது கண்டிக்கத்தக்கது என்றும், ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை எனவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கண்டன போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் எங்கள் அமைச்சரை நீக்க நீங்கள் யார் என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய பாஜக அரசில் உள்ள 44 சதவீத அமைச்சர்கள் கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இவர்களைப் பதவியிலிருந்து விலக்கச் சொல்லி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவாரா ஆர்.என்.ரவி? என்று சேலம் மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்ற பெயரில்
பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
திமுகவினர் தமிழக ஆளுநரை கண்டித்து ஒட்டிய சுவரொட்டிகள் அவ்வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.