சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என விக்னேஷ் என்பவர் குற்றம்சாட்டி வந்ததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில், ஆத்திரம் அடைந்த விக்னேஷ், டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விக்னேஷ் உட்பட 4 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர அனைத்து துறை அரசு டாக்டர்களும், காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு டாக்டர்கள் சங்கங்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமைச்சர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் பாதுகாப்பு குறித்து அரசு டாக்டர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.