லாரியில் சமையல் செய்த ஓட்டுநர்: கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து!

சென்னை பூந்தமல்லி அருகே கண்டெய்னர் லாரியில் சமைத்தபோது சிலிண்டர் வெடித்த விபத்தில் ஓட்டுநர், உதவியாளர் படுகாயம்.

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் சுங்கசாவடி அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு லாரியை ஓட்டி வந்த டிரைவர் விஜயகுமார் மற்றும் கிளீனர் விஜயகுமார் ஆகிய இருவரும் லாரியின் முன் பகுதியில் டிரைவர் சீட்டுக்கு அருகே அமர்ந்து சிறிய சிலிண்டரில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது. இதில் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோரின் உடலிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததையடுத்து தீக்காயங்களுடன் இருவரும் லாரியில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்தனர்.

அப்போது அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த நசரத்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் சரவணன், இளங்கோ, ஞானசேகர் ஆகியோர் அதிர்ச்சி அடைந்து தீக்காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கண்டெய்னர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிய சிலிண்டரில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. மேலும் காயம் அடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News