பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் பழைமையான இரும்பு மேம்பாலம் ஒன்றை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர். பெகுசாராய் மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைத்து ரயில் இன்ஜின் ஒன்றை ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச் சென்றனர். இது போன்ற வினோத திருட்டுக்கள் பீகார் மாநிலத்தில் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், தற்போது மொபைல் போன் டவர் ஒன்றை கழற்றி எடுத்துச் சென்றிருக்கின்றனர். பாட்னாவில் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் மொபைல் போன் டவரை அமைத்திருந்தது. ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஜி.டி.எல் நிறுவனம் அந்த மொபைல் போன் டவரை பராமரித்து வந்தது.
மொபைல் போன் டவர் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வாடகை தராததால் மொபைல் டவரை கழற்றி எடுத்துச் செல்லும்படி டவர் இருந்த வீட்டு உரிமையாளர் கம்பெனி ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து கம்பெனி ஊழியர்கள் மொபைல் டவரிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் கழற்றி எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில் மர்மநபர்கள் சிலர் தாங்கள் கம்பெனி ஊழியர்கள் என்று கூறிக்கொண்டு 29 அடி உயரம் கொண்ட மொபைல் போன் டவரை கழற்றி லாரியில் எடுத்துச் சென்றுவிட்டனர். இந்த நிலையில், ஜி.டி.எல் கம்பெனி ஊழியர்கள் வந்து பார்த்தபோது மொபைல் டவர் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.