கோவிட் தொற்றுக்கு பிறகு, இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஓடிடி நிறுவனங்கள், பெரிய ஹீரோவின் படங்களை மிகப்பெரிய தொகைக்கு வாங்கின. சில சமயங்களில், படத்தின் அறிவிப்பு வெளியானபோதே, படத்தை வாங்கிய சம்பவங்களும் அரங்கேறியது.
ஆனால், இதனால் பெரிய அடியை வாங்கிய அந்நிறுவனங்கள், தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு சாட்சியாக, தி கோட் படக்குழுவிற்கு, நெட் பிளிக்ஸ் நிறுவனம் செக் ஒன்று வைத்துள்ளது.
அதாவது, தி கோட் திரைப்படம், ரூபாய் 250 கோடிக்கு நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பலரும் செய்தி வெளியிட்டனர். ஆனால், உண்மையில் அந்த நிறுவனம், அப்படத்தை ஒப்பந்த அடிப்படையில் வாங்கவில்லையாம்.
இதுவரை, வெறும் பேச்சுவார்த்தையில் மட்டுமே படத்தை வாங்குவதாக ஒப்புக் கொண்டு இருக்கிறார்களாம். மேலும், படம் முழுமையாக தயாரான பிறகு, அதனை பார்த்துவிட்டு, இப்படத்தை எவ்வளவு ரூபாய்-க்கு வாங்கலாம் என்று முடிவு செய்வதாக, அவர்கள் கூறியிருக்கிறார்களாம்.
ஆனால், அதுவரை, படத்தின் போஸ்டர்களில், தங்களது நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்திக் கொள்ள, நெட் பிளிக்ஸ் அனுமதித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, அந்த திரைப்படத்தின் தரத்தை பொறுத்து, விலை நிர்ணயம் அல்லது படத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை, நெட் பிளிக்ஸ் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.