சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா இன்றி மலேசியாவிற்குள் வரலாம் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது சீனா மற்றும் இந்தியா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சலுகையை அளித்துள்ளது.
அதாவது, சீனா மற்றும் இந்தியா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் விசா தேவை இல்லை என்றும் அவர்கள் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கலாம் என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அன்வர் இப்ராஹிம், ‘சீன தூதரகத்துடன் இணைந்து, 50 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன், மலேசியா நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல், 15 நாட்கள் வரை தங்கவதற்கு, இலவச விசா அனுமதியை சீனா அறிவித்தது. அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மலேசியாவின் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இலவச விசா சலுகையை அறிவித்துள்ளோம். குற்றப்பின்னணி கொண்டவர்கள் இதில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது தொடர்பாக முழு விவரங்களை, உள்துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார்’ என்றார்.