ரமணா படத்தை போல இறந்து போன பெண்ணிற்கு 3 நாட்களாக சிகிச்சை செய்த மருத்துவமனை

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ரமணா’ திரைப்படத்தில் இறந்து போன ஒருவருக்கு சிகிச்சை செய்து லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். இந்த காட்சியை ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அதே போன்ற ஒரு சம்பவம் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடத்துள்ளது.

அந்த தனியார் மருத்துவமனையில் இறந்து போன பெண்ணிற்கு மூன்று தினங்களாக சிகிச்சை அளித்து, தவணை முறையில் கட்டணத்தை வசூலித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள பென்னாகரம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் தனது மனைவி வனிதாவை மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி வனிதாவின் பெற்றோரிடம் மாதேஸ்வரன் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர் வனிதா தானாக பேசி வருவதால் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பே வனிதா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகம் வனிதா இறந்ததை தெரிவிக்காமல் தவணை முறையில் பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனிதா நேற்று மாலை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வனிதாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் வனிதாவின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.