புதுச்சேரி அரசு உப்பளம் ஆட்டுப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியுள்ளது. இதையடுத்து, இந்த பகுதியில் பொதுமக்கள் வீடு கட்டி குடிபுகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், சாவித்திரி என்பவர் தனக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில், 3 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி வந்தார். இந்த கட்டிடத்தின் புதுமனை புகுவிழா வரும் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, சாவித்திரி வீட்டின் பின்பகுதியில் உள்ள உப்பனாறு கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி பொதுப்பணிதுறையால் நடைபெற்று வந்தது. பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது சாவித்திரியின் வீடு எதிர்பாராத விதமாக லேசாக
சாய்ந்துள்ளது.
இதனை பார்த்ததும், கட்டிடத்தின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் விலகி ஓடினர். அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த 3 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு சரிந்து வாய்க்காலுக்குள் விழுந்தது.
இதில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அஸ்திவாரம் சரியாகப் போடப்படாததாலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தார். மேலும், வீட்டை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்