லேண்டரில் உள்ள சேஸ்ட் கருவி மூலம் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை ஆராயப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. அதன் விவரம்:
விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் (ChaSTE-Chandra’s Surface Thermophysical Experiment) சாதனத்தின் முதல் ஆய்வு தரவுகள் கிடைத்துள்ளன. இந்த கருவி, நிலவின் மேற்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை ஆராய்ந்து வருகிறது. அதன்படி, நிலவின் தரைப் பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ. ஆழத்துக்கு துளையிட்டு, தனது சென்சார்கள் வாயிலாக வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த சேஸ்ட் சாதனம், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூட்டிணைப்பில் வடிவமைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.