சென்னை அடையாறில் மாநகரப் பேருந்து ஒன்றை பணிமனை ஊழியர் குணா என்பவர் குடிபோதையில் இயக்கி எதிரே உள்ள காவல் நிலைய சுற்று சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு பணிமனையில் நேற்று இரவு தொழில்நுட்ப பணியாளர் குணசேகரன் என்பவர் குடிபோதையில் பணிக்கு வந்துள்ளார்.
குடிபோதையில் இருந்த குணா, பேருந்தில் பழுது ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக சென்னை அடையாறில் இருந்து கிழக்கு தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய 99 தடம் ஏன் கொண்ட பேருந்தை இயக்கியுள்ளார்.
அப்பொழுது அடையாறு பணிமனைக்கு எதிரே உள்ள காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது பயங்கர வேகத்தை சென்று மோதியுள்ளார்.
இதில் காவல் நிலைய வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. அதிகாலை 2. 50 மணியளவில் நடைபெற்ற விபத்து என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, பணியாளர் குடிபோதையில் எப்படி வாகனத்தை இயக்கினார். இதற்கு அடையாறு பணிமனை அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர், பணியில் இருந்த டெக்னீசியன் குணா அடையாறு பணிமனை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகர பேருந்தை குடிபோதையில் பணியாளர் இயக்கி, காவல் நிலையத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பயணிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.