ஒரு கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட புதிய சாலை மறுநாளே சேதம்..!

நெல்லை மேலப்பாளையத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக போடப்பட்ட சாலை மறுநாளே சேதம் ஆகியதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாநகரத்துக்கு உட்பட்ட பல்வேறு சாலைகள் மிக மோசமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்ட பணிகளுக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு சரிவர சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் புதிதாக சாலை போடப்பட்ட மறுநாளே அந்த சாலை சேதமாகி இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது நெல்லை குறிசிலிருந்து மேலப்பாளையம் நோக்கி செல்லும் நேதாஜி ரோடு கடந்த பல மாதங்களாக குண்டும் குழியுமாக மிக மோசமாக காணப்பட்டது. இதையடுத்து மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நேதாஜி ரோட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

முதல் கட்டமாக சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை போடப்பட்ட நிலையில் மறுநாளே அந்த சாலை பல்வேறு இடங்களில் சேதமாகி ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாலை போடப்பட்ட 12 மணி நேரத்தில் இது போன்று சாலை சேதமாகி கற்குவியல்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, சாலை போட்டு உடனே போக்குவரத்து வாகனங்கள் சென்றதால் சாலை சேதமாகி உள்ளது. மேலும் சாலை அமைக்கும் பணி முழுமையாக முடிவு பெறவில்லை. இன்னும் சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

இருப்பினும் மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் இதுபோன்று சாலை அமைக்கும்போது அதை உரிய பாதுகாப்புடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News