கீழே கிடந்த 20 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் – பொன்னாடை அணிவித்த காவலர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவர் மதுரையில் உள்ள தனது உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது மனைவியுடன் ஏரியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூருக்கு வந்துள்ளார்.

பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து நிலையத்திற்குள் வந்து தனது மனைவியுடன் மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். அப்பொழுது தினகரன் தனது பனியனுக்குள் வைத்திருந்த ரூ 20 ஆயிரம் பணத்தை பார்த்தபோது பணம் தொலைந்தது அறிந்து உடனடியாக பணத்தை அங்கும் இங்கும் தேடியுள்ளார்.

பணம் கிடைக்காததால் அருகில் உள்ள திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் தினகரன் புகார் அளிக்க செல்லும் பொழுது, அங்கு குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன் என்ற 65 வயது முதியவர் தனது கையில் வைத்திருந்த பணத்தை கொடுத்து இதை யாரோ தவற விட்டதாக ஆய்வாளர் கலைவாணி மற்றும் சார்பு ஆய்வாளர் செல்வ பிரபு ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

காவல் நிலையத்திற்கு வந்த தினகரன் மற்றும் அவரது மனைவியிடம் ஆய்வாளர் கலைவாணி முதியவர் முருகேசன் கையாலேயே பணத்தை ஒப்படைக்க செய்தார். இதனையடுத்து முதியவர் பணத்தை கொடுத்து சரியாக உள்ளதா என எண்ணிப்பார்க்க கூறினார். தினகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் முதியவர் முருகேசனுக்கு இரு கைகூப்பி நன்றி கூறினர்.

உடல் உழைப்பால் தினமும் கஷ்டப்பட்டு 65 வயதிலும் கூலி தொழில் செய்து வாழும் முதியவர் முருகேசன் கீழே கிடந்த ரூபாய் 20 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவரது நேர்மையை கண்டு காவல் ஆய்வாளர் கலைவாணி அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். சார்பு ஆய்வாளர் செல்வபிரபு மற்றும் நிலைய காவலர்களும் முதியவரின் செயலை கண்டு பாராட்டினர்.

RELATED ARTICLES

Recent News