கோவை க.க.சாவடி அருகே வாளையார் பகுதியில் பாருடன் இணைந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நவக்கரையை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி, பாருக்கு வந்த நபர் ஒருவர் தனது பர்ஸை மறந்து விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்தப் பர்ஸை காணவில்லை. இதுகுறித்து பார் உரிமையாளர்களான சதீஷ்குமார், ஸ்டான்லி ஆகியோரிடம் கூறியுள்ளார்.
பின்னர், பார் ஊழியர் மணிகண்டன் தான், பர்ஸை எடுத்திருக்கிறார் என்பது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. தொடர்ந்து பார் உரிமையாளர்கள், மணிகண்டனை பர்ஸை ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து மணிகண்டன் பர்ஸை ஒப்படைத்தார். ஆனால் அதனுள்ளே இருந்த பணம் இல்லை.
பணம் குறித்து மணிகண்டன் கேட்டபோது அங்கிருந்து அவர் திடீரென ஓட ஆரம்பித்தார். அவரை பின்தொடர்ந்த சதிஷ்குமார், ஸ்டான்லி மற்றும் அவர்களின் நண்பர்களான கண்ணன், அண்ணாதுரை ஆகியோர் மணிகண்டனை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் சதீஷ்குமார், ஸ்டான்லி, கண்ணன், அண்ணாதுரை ஆகியோரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பணத்தை திருடிய பார் ஊழியரை, பார் உரிமையாளர்களே அடித்துக் கொன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.