தமிழக மக்கள் பிரதமா் மோடியின் பக்கமும், அண்ணாமலையின் பக்கமும் இருக்கின்றனா் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தில் (சைமா) நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தாரக மந்திரத்தை பிரதமா் மோடி உலகுக்கு கொடுத்திருக்கிறார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில திராவிட கட்சிகள் இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. மொழியின் பெயராலும், பல்வேறு தருணங்களிலும் மக்களை, குறிப்பாக இளைஞா்களை அவா்கள் தவறாக வழிநடத்துகின்றனா். ஆனால் பிரதமா் மோடியின் ஒரே குடும்பம் என்ற தகவலை, அண்ணாமலை தனது நடைப்பயணத்தின் மூலம் மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் கொண்டு சோ்த்து வருகிறார்.
தமிழக மக்கள் பிரதமா் மோடியின் பக்கமும், அண்ணாமலையின் பக்கமும் இருக்கின்றனா். தமிழ்நாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஊழல் அரசாக உள்ளது. ஊழலும், தவறான கொள்கை கொண்டதுமான திமுகவை அகற்றுவதன் மூலம் தமிழ்நாடு இழந்துவிட்ட அதன் பெருமையை இந்திய அளவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் திரும்பப் பெறும்.
பொருளாதாரத்தில் சா்வதேச நாடுகள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. சீனாவும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையிலும் நமது ஜவுளித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜவுளித் துறையில் தனது பழைய நிலைக்கு இந்தியா விரைவில் முன்னேறும். இந்திய அளவில் ஜவுளித் தொழிலில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் என்றார்.