தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிராஜன். இவர் வில்லிசேரி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார்.
சமீபத்தில் ஊராட்சி சார்பில் சாலை, ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த ஆக்கிரமிப்பு பணியின் போது அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் பயன்படுத்தி வரும் நிலத்தின் பகுதியை அகற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் காசிராஜன், வெங்கடாசலபதி இடையே உள்ளாட்சி தேர்தல் பிரச்சினையும் இருப்பதாக கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு காசிராஜன் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் தான் பயன்படுத்தி வரும் நிலத்தின் பகுதியை வேண்டுமென்றே அகற்றியதாக கூறி வெங்கடாசலபதி , அரிவாள்மனையை கையில் வைத்து கொண்டு காசிராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து காசிராஜன் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாசலபதியை கைது செய்து உள்ளனர்.
இந்நிலையில் வெங்கடாசலபதி கையில் அரிவாள்மனை வைத்து கொண்டு, காசிராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.