சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் பெரிய பையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவருடைய உடைமைகளை சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பீர்க்கன்காரணை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கேரளா, திரிச்சூரை சேர்ந்த செபின்(23), என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து விட்டு சொந்த ஊர் சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.