சென்னை கோடம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் அருண்குமாரிடம் ரவுடி ஓசி பிரியாணி கேட்டு கடையை அடித்து நொறுக்கியுள்ளார்.
அருண்குமார் என்பவர் சூளைமேடு பெரியார் பாதை பகுதியில் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 2-வது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வாலிபர் ஒருவர் நேற்று இரவு மது போதையில் சென்று ஓசி பிரியாணி கேட்டுள்ளார். அதற்கு கடையில் இருந்த அருண்குமார், பணம் கொடுத்துவிட்டு பிரியாணி பார்சல் வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போதை வாலிபார் கடையில் இருந்த பாத்திரம் மற்றும் பொருட்களை அடித்து உடைத்துள்ளார். இதை பார்த்ததும், கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அடித்து நொறுக்கி வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்த போலீசார் போதையில் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் அதே பகுதியில் ரவுடியாக வலம்வரும் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள குறிப்பிடத்தக்கது.