சென்னை செம்மஞ்சேரி சேர்ந்தவர் ரோகித் ராஜ். இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி ரோகித் ராஜ் டிபி சத்திரம் சிமெட்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக சேத்துப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் ரோகித் ராஜை சுற்றி கைது செய்ய முயன்ற போது ரோகித் ராஜ் அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து போலீஸாரை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தற்காப்புக்காக ரவுடி ரோகித் ராஜை சுட்டார். இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ரவுடியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் அருண் பாராட்டினார். ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.