பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை!

விருத்தாசலம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஹரிஷ் (16) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் ஹரிஷ் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த மாணவன் ஹரிஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி இன்று மாலை ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவன் ஹரிஷ் இறப்பிற்கு காரணம் மருத்துவர்கள்தான் என்றும், மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறியும் ஹரிஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

பின்னர் மருத்துவர்கள் அறைக்கு முன்பு சென்ற அவர்கள், ஹரிஷ் மரணத்திற்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்றும், சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த அண்ணாமலைநகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News