தோசைக்கு சட்னி தராததால் சப்ளையரின் மூக்கை கடித்த வாலிபர்!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனா அருகே புளியன்மான் என்ற பகுதியில் கவியரசன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையில் சிவசந்திரன் என்பவர் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிகிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் சுஜீஷ் என்பவர் கடைக்கு உணவு சாப்பிட வந்துள்ளார். இவர் இந்த ஹோட்டலுக்கு எதிரே உள்ள பேக்கரி கடை வைத்திருக்கும் முதலாளியின் மகன் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து ஊழியர்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த தோசையை சுஜீஷுக்கு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த தோசையுடன் சட்னி இல்லை என்று கூறி சுஜீஷ் கடை ஊழியர் சிவசந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியுள்ளது. இதில் சுஜீஷ் சிவசந்திரனின் மூக்கை கடித்துள்ளார். இதனால் அவரது மூக்கில் ரத்தம் கொட்டியுள்ளது. மேலும் இந்த சண்டையை தடுக்க வந்த மற்ற ஊழியர்களையும் சுஜீஷ் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

பின்னர் படுகாயமடைந்த ஊழியர் சிவ சந்திரனை சிகிச்சைக்காக கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிவச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வண்டன்மேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News