கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த மம்தாஸ்ரீ(22)க்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு முதுகுவலி ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அருகில் இருந்த மருந்தகத்தில் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டுள்ளார். ஆனாலும் அவருக்கு வலி குறையவில்லை.
இதையடுத்து, அவரது அண்ணன் பிரசாந்த், மம்தாஸ்ரீயை, அப்துல் என்ற ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளார். இந்த ஜோதிடர் கூறியதுபடி கடந்த மூன்று மாதங்களாக மம்தாஸ்ரீக்கு மஞ்சள் நீரும், எலுமிச்சை தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளனர்.
இதனால் மம்தாஸ்ரீயின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து வீட்டுக்காவலில் இருந்த மம்தாஸ்ரீயை தகவல் அறிந்து வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் மீட்டனர். பின்னர், அப்துல் போலி ஜோதிடர் என்பதை அறிந்த மம்தாஸ்ரீயின் குடும்பத்தினர் அவரை துடைப்பத்தால் தாக்கியுள்ளனர்.
போலி ஜோதிடரின் பேச்சை கேட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உணவு வழங்காமல் வீட்டில் சிறைவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.