அரக்கோணம் அருகே சோதனை சாவடி மீது கார் மோதியதில் பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இந்த சம்பவம் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக சீனிவாசலு என்பவர் பணியாற்றி வருகிறார். அரக்கோணத்தில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் இரட்டைக் குளம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென சோதனை சாவடி மீது மோதி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
அதுமட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மீதும் கார் மோதியதில் காயமடைந்தார் . அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெண் ஒருவர் காரை ஓட்டி வந்ததும் அவர் பிரேக் மீது கால் வைப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டர் மீது மிதித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கார் சோதனை சாவடி மீது மோதியது தெரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.