ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்னொருபுறம் லட்டு வாங்க கூட்டம் அலைமோதும். இதற்காக பிரத்யேக கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு டிக்கெட் விற்பனை செய்து லட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் திருப்பதி லட்டு கவுன்ட்டரில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவாரி லட்டு வளாகத்தில் நேற்று அதிகாலை வழக்கம் போல் லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. 36வது கவுன்ட்டரில் சுமார் 2 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில் கொள்ளை அடித்த நபர் யார் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் பெயர் சீதாபதி. ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் கைதானவர் எனக் கூறப்படுகிறது. அவர் மாயமான நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.