“ஆம் ஆத்மியின் நம்பகத்தன்மை பூஜ்ஜியம் அல்ல.. அது மைனஸ்-ல இருக்கு” – கடுமையாக விமர்சித்த ஜே.பி.நட்டா!

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யா சபா உறுப்பினராக இருப்பவர் ஸ்வாதி மலிவால். இவர், சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பீபவ் குமாரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பாஜகவினர் ஆம் ஆத்மியை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று ஏ.என்.ஐ ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியது பின்வருமாறு:-

“முதலில், பொய்களின் அடித்தளத்தை பயன்படுத்தி தான் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நம்பகத்தன்மை என்பது பூஜ்ஜியம் கிடையாது, அது தற்போது மைனஸ் அளவில் சென்றுள்ளது. டெல்லி மக்களின் முன்பு, கெஜ்ரிவாலின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நான் அரசியலில் நுழைய மாட்டேன், தேர்தலில் போட்டியிட மாட்டேன், பெரிய பங்களா மற்றும் கான்வாய் போன்ற பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்த மாட்டேன், காங்கிரஸ் கட்சி உடன் சமரசம் ஆக மாட்டேன் என்று டெல்லி முதலமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்தார்.

மேலும், நான் எந்தவொரு ஊழலையும் செய்ய மாட்டேன், பெண்களை மதிப்பேன் என்றும் தொடர்ச்சியாக கெஜ்ரிவால் கூறினார். ஆனால், இந்த விஷயங்களையெல்லாம் அவர் பின்தொடர்கிறாரா?. அவர் கட்சியை தொடங்கினார். தேர்தலில் போட்டியிட்டார் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சமரசமும் ஆனார்” என்று ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

“ஊழல் சம்பந்தமான வழக்கில் தான், அவர் சிறைக்கு சென்றார். தற்போது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீனில், சில நாட்களுக்கு அவர் வெளியே வந்துள்ளார்” என்றும் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உடனான செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த சம்பவம் குறித்து கேள்வி கேட்டதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அமைதியாக இருந்தார்.

இதுகுறித்து பேசிய ஜே.பி.நட்டா, “இந்த சம்பவம் அவருடைய வீட்டில் தான் நடந்திருக்கிறது. ஆனால், அவர் அமைதியாக இருக்கிறார். இது பாஜகவின் சதி என்றால், பிறகு எதற்கு மைக்கை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தள்ளினீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

“பெண்கள் தரக்குறைவாக நடத்தப்பட்ட விஷயத்தில், ஏன் அமைதியாக உள்ளீர்கள்? எது உங்களை தடுக்கிறது? உங்களது செயல்கள் பேசிக் கொண்டு இருக்கிறது. உங்கள் கட்சியின் கலாச்சாரம் என்ன? ஒருமுறை, கட்சியின் தலைமை செயலாளர் தாக்கப்பட்டார்.

இம்முறை ஒரு பெண் அவரது வீட்டில் தாக்கப்பட்டார். அதுவும் அந்த பெண் ஒரு ராஜ்ய சபா எம்.பி. அதுமட்டுமில்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமான உறுப்பினரில் அந்த பெண்ணும் ஒருவர்.

இதுதான் அவர்களது சிந்தனையா? அவர்களது மிகவும் கீழான சிந்தனை தான் உள்ளது. இது உங்களது கலாச்சாரம் என்ன என்று காட்டிவிட்டது. நீங்கள் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டீர்கள். அனைத்தும் தெளிவாக உள்ளது மற்றும் டெல்லியின் மக்கள் அவர்களுக்கு பதில் அளிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

பாஜகவிடம் இருந்து, ஸ்வாதி மலிவால் ஏதாவது உதவி கேட்டாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்த ஜே.பி.நட்டா, “எங்கள் கட்சியிடம் நெருக்கமாக அவர் வந்ததே கிடையாது. நாங்கள் பேசியதும் கிடையாது. இது நாங்கள் வேலை செய்யும் விதமே கிடையாது. நாங்கள் இவர்களை போல் பணியாற்ற மாட்டோம்.

யாரும் இதுமாதிரி தவறாக வழிநடத்தப்படக் கூடாது” என்று கூறினார். மேலும், “உங்களது திருட்டுகள் பிடிக்கப்பட்டுவிட்டால், நீங்கள் காவல்துறையினரை குறை சொல்வீர்கள் என்பதை போல, ஆம் ஆத்மியின் வாதம் உள்ளது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

“அவர்களிடம் நம்பகத்தன்மை என்பதே கிடையாது. அவர்கள் கட்சி, தலைவர்கள் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கூட எந்தவொரு நம்பகத்தன்மையும் இல்லை. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்ல முடியும்.

எந்த அளவிற்கு வேண்டுமானாலும், அவர்களால் குணிந்து செல்ல முடியும். எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர்களால் முன்வைக்க முடியும். ஆனால், அவர்களால் தப்பிக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News