ஆண்டாள் கோயிலை சுற்றி மர்ம ட்ரோன் பரந்ததால் பரபரப்பு..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை சுற்றி மர்ம ட்ரோன் பரந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து இரு இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை கோபுரம், கோயில் வளாகத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தங்க விமானத்தை பாதுகாக்க கோயிலின் மேல் தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஒரு ட்ரோன் கோயில் மேல்பகுதி, ராஜகோபுரம், தங்க விமானத்தை சில நிமிடங்கள் சுற்றி வந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக ட்ரோனை தேடி கண்டுபிடிக்க முயன்றனர்.

ஆனால் ட்ரோன் திரும்பிச் சென்று விட்டது.

டிரோன் யாரால் எங்கிருந்து இயக்கப்பட்டது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.