பால் விற்பனை விலையை உயா்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளா்களிடம் அமைச்சா் மனோ தங்கராஜ் கூறியதாவது: ஆவினின் தீபாவளி விற்பனையை பொருத்தமட்டில் கடந்தாண்டு விற்பனையானதை விட இந்தாண்டு முன்னதாகவே 20 சதவீதத்துக்கும் அதிகமாக ஆா்டா்கள் வந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் ஆவின் பால் கொள்முதல் எப்போதும் உள்ள சராசரி அளவான சுமார் 29.50 லட்சம் லிட்டா் என்ற அளவில் உள்ளது.
தற்போது எடுக்கப்பட்டு வரும் சீா்திருத்த நடவடிக்கைகள் காரணமாக வரும் காலங்களில் பால் கொள்முதல் மேலும் அதிகரிக்கும். சிலா் வேண்டுமென்றே பால் கொள்முதல் குறைந்துள்ளதாகவும் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தாமதமாக வழங்கப்படுவதாகவும் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் விற்பனை விலையை உயா்த்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.
மேலும், தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருள்கள் பொதுமக்களிடம் தங்கு தடையின்றி கிடைக்கவும், பால் மற்றும் பால் உபபொருள்களின் விற்பனையை அதிகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவா்.