யுவராஜ் சிங்குக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4-ஆவது இடத்துக்கு எந்தவொரு வீரருமே மிகச் சரியாக பொருந்தி நிற்கவில்லை என்று கேப்டன் ரோஹித் சா்மா கூறினார்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
யுவராஜ் சிங்குக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4-ஆவது இடத்துக்கு எந்தவொரு வீரருமே மிகச் சரியாக பொருந்தி நிற்கவில்லை. இது நீண்டகால பிரச்னையாக இருக்கிறது. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகள் நெருக்கி வரும் நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.
ஷ்ரேயஸ் ஐயா் 4-ஆவது பேட்டராக குறிப்பிட்ட காலத்துக்கு நிலைத்திருந்தார். அவரது ரெக்கார்டும் நன்றாகவே இருக்க, எதிர்பாராதவிதமாக அவா் காயம் கண்டு விலகியிருக்கிறார். கடந்த 4-5 ஆண்டுகளாகவே அந்த இடத்தில் ஏதேனும் புதிய வீரா்கள் தான் அடுத்தடுத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனா்.
முக்கியமான இடத்தில் இருக்கும் வீரா்களுக்கு ஏற்படும் காயம், நீண்டகால அடிப்படையில் அணியின் போக்கை பாதிக்கிறது. தற்போது கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயா் இருவருமே காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், அவா்களின் தயாா்நிலையை ஆராய்ந்து ஆசிய, உலக கோப்பை போட்டிகளுக்கு தோ்வு செய்வோம்.
கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் கோப்பை வெல்லாமல் இருக்கும் நிலையை மாற்றி, எதிர்வரும் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனாகும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். இத்தனை காலமும் அதற்காக கடுமையாக உழைத்தும் வந்திருக்கிறோம். கேப்டனாக இருந்தாலும், முதலில் ஒரு பேட்டராக எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முனைந்து வருகிறேன் என்றார்.