காவல் சீருடை அணிந்து கொண்டு செல்போனை திருடிய ஆசாமி கைது..!

திருமங்கலத்தில் போலீஸ் என கூறி பள்ளி மாணவனை மிரட்டி செல்போனை பறித்துசென்ற போலி போலீஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமங்கலம் அருகேயுள்ள கீழ உரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(38) இவரது மகன் நவீன் பிரபு(15). திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

நேற்று இரவு இவர் டூவிலரில் ஜெராக்ஸ் எடுக்க திருமங்கலம் முனிசீப்கோர்ட் ரோட்டில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். ஜெராக்ஸ் எடுத்து கொண்டு டூவிலரில் கிளம்ப முற்படும் போது மாணவனை மறித்த போலீஸ்காரர் ஒருவர் மாணவனான நீ எப்படி டூவிலர் ஓட்டுகிறாய், லைசன்சை எடு, ஆதார்கார்டை காட்டு என மிரட்டும் தோரணையில் கேட்கவே நவீன் பிரபு பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார்.

தொடர்ந்து உனது அப்பாவிடம் பேச வேண்டும் என கூறி மாணவனிடம் செல்போனை வாங்கி கொண்டு நீ நகர் காவல் நிலையத்திற்கு வந்து போனை பெற்று கொள் என கூறி அனுப்பி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவன் நவீன்பிரபு இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார், அவர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு வந்து மாணவனது போனை கேட்டுள்ளனர். நாங்கள் யாரும் செல்போனை வாங்கி வரவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து போலீஸ் உடையில் வாலிபர் ஒருவர் மாணவனை ஏமாற்றி செல்போனை பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக நவீன்பிரபுவின் தாய் பஞ்சவர்ணம்(35) கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது காவலர் உடையில் வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் வேலூர் மாவட்டம்
திருப்பத்தூரை அடுத்த ஏரிக்கொடியை சேர்ந்த ஜெயசீலன் மகன் விக்னேஸ்வரன்(24) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்தனர். போலீஸ் உடையில் மதுரை மட்டுமல்லாது விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News