தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுப்பிரமணிய ஆலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் கீழ வீதியில் பழனி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 95 ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. இங்குள்ள முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் மேற்கு நோக்கி கோவில் கொண்டுள்ள விசேஷமான தளமும் அதே போல பழனி ஆண்டவருக்கு நடத்தப்படும் பாலாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சகல பாவமும் அகலும் என்பது நம்பிக்கை.

இவ்வாறு சிறப்புமிக்க இக்கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு 108 லிட்டர் பால், மஞ்சள், இளநீர், திரவியம் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பழனி ஆண்டவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மட்டுமல்லாமல் வெளி ஊரிலிருந்து இந்த பழனி ஆண்டவர் சாமியை தரிசிக்க ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.