சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற பல்வேறு அமைப்புகளை, தனக்கு எதிராக, மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று, நாடாளுமன்றத்தில், நேற்று ராகுல் காந்தி பேசியிருந்தார். மேலும், நீட் தொடர்பான தனது விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “குழந்தைதனமான புலம்பல்கள் தொடர்ந்து நடக்கின்றன. அனுதாபத்தை பெற, புதிய நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
உன்மை என்னவென்றால், இவர் ( ராகுல் காந்தி ) கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ளார் மற்றும், பிற்படுத்தப்பட்ட சமூகம் திருடர்கள் என்று கூறியதற்காக குற்றவாளியாக்கப்பட்டவர்.
மேலும், அவதூறாக பேசியதற்காக, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தார்” என்று பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
இதுமட்டுமின்றி, 2018-ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியை, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கட்டிப்பிடித்திருந்தார். இந்த சம்பவத்தையும் பிரதமர் மோடி, கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த கடுமையான குற்றச்சாட்டுக்கு, காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும், தங்களது பதிலடிகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ 2 மணி நேர 24 நிமிட பேச்சில், ராகுல் காந்தியால் முடியாது என்று கூறினீர்கள். அதே விதத்தில் தான், தற்போது 140 கோடி இந்தியர்களும், உங்களுடைய அரசாங்கத்தால் எதுவும் முடியாது என்று கூறி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதேபோல், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பிரதமர் மோடிக்கு தனது பதிலடியை கொடுத்துள்ளார். அதில், “அரசாங்கத்தில் உள்ள சில குழந்தைகள், இன்னும் நாட்டின் பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளாமலே உள்ளனர்” என்று கூறினார்.