திருப்பதி அருகே உள்ள சிகுருவாட கிராமத்தில் இருக்கும் ஒய் எஸ் ஆர் காலனியில் வசிக்கும் கோவிந்த், சித்தூர் மாவட்டம் புஷ்கனிவாரி பள்ளியை சேர்ந்த இளம் பெண் மானசா ஆகியோருக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் இரண்டு பேரும் கோவிந்த், சொந்த ஊரான சிகுருவாடாவில் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மானசா, தன் கணவன் கோவிந்திடம் தனி குடித்தனம் போகலாம் என்று நச்சரிக்கை துவங்கினார்.
மனைவியின் நச்சரிப்பு காரணமாக பத்து நாட்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பேசி அங்கு இரண்டு பேரும் தனிக்குடித்தனம் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி கோவிந்த் சகோதரன் பாஸ்கருக்கு பதட்டத்துடன் போன் செய்த மானசா, உங்கள் தம்பிக்கு என்னவோ ஆகிவிட்டது.
கீழே விழுந்து கிடக்கிறார் என்று கூறினார். பாஸ்கர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு சென்று பார்த்த போது கோவிந்த் இறந்து போனது தெரிய வந்தது.
எப்படி நடந்தது இது என்று மானசாவிடம் கோவிந்த் குடும்ப உறுப்பினர்கள் விசாரித்தனர். அப்போது கடன் தொல்லை காரணமாக கோவிந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று மானசா தெரிவித்தார்.
அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிய கோவிந்த் குடும்பத்தினர் உடலை சொந்த ஊரான வெதுருகுப்பம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது கோவிந்த் கழுத்தில் சிறு காயம் இருப்பதை பார்த்த அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது எனவே இது பற்றி கோவிந்த் சகோதரர் பாஸ்கர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்று கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மானசாவை பிடித்து விசாரித்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது கடந்த 15 ஆம் தேதி கோவிந்த் வீட்டிற்கு ஒரு வாலிபர் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி விசாரித்த போது, மதனப்பள்ளியை சேர்ந்த 27 வயது வாலிபர் சிம்மாதிரியும் நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் காதலை விரும்பாத என்னுடைய பெற்றோர் கோவிந்துக்கும் எனக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
எனவே இந்த திருமண பந்தத்தில் இருந்து விடுபட முடிவு செய்து என் காதலனை வரவழைத்து தூங்கி கொண்டிருந்த கோவிந்த் கழுத்தை இரண்டு பேரும் சேர்ந்து நெறித்து கொலை செய்தோம் என்று போலீசாரிடம் கூறினார் மானசா. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.