சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் 5 பேர் நேற்று இரவு திருவொற்றியூர் கணக்கர் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது புரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரை வழி விட மறுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து ஹோட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து போலீஸ்காரர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் 3 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.