தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது “எங்களுக்கு மோடி ஜி, அமித் ஷா ஜி தான் எல்லாமே. அண்ணாமலை எல்லாம் ஜஸ்ட் லைக் தட்.. அவ்வளவுதான்” என்றார். இது, தமிழக பாஜகவினரை கொந்தளிக்கச் செய்தது.
இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு தராதரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை” என்றார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.
இந்நிலையில்தான், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அண்ணாமலையை அவசரமாக டெல்லிக்கு அழைத்திருக்கிறார். இதனால் தனது பாதயாத்திரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு அண்ணாமலை டெல்லி புறப்பட்டிருக்கிறார்.