ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத 2-வது வாரத்தில், தமிழகத்திற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான தேதியை, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் மார்ச் 14-ஆம் தேதி அன்று, தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், மார்ச் 15-ஆம் தேதி அன்று, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், இதுதான் திமுக அரசின் முழு நீள பட்ஜெட்டாக இருக்கும். இதன்காரணமாக, மக்களை கவருவதற்காக, பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, இன்று முதல் 3 நாட்களுக்கு, பட்ஜெட்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பல்வேறு ரீதியான கருத்துகள் கேட்கப்பட்டு, அது ஆக்கப்பூர்வமானதாக இருந்தால், பட்ஜெட்டில் இணைக்கப்படும்.