தமிழக அரசின் முக்கிய வருவாய்களில் ஒன்றாக பத்திரப்பதிவு இருந்து வருகிறது. இந்த துறையின் மூலம், கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மட்டும், 238 கோடியே 15 லட்சம் ரூபாய் ஈட்டப்பட்டது. இதேபோல், டிசம்பர் 31 -ஆம் தேதி அன்றும், 231 கோடியே 51 லட்சம் ரூபாய், பத்திரப்பதிவுத்துறையின் மூலம் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.
அந்த இரண்டு தினங்களும், மங்களகரமான நாளாக கருதப்படுவதால், பொதுமக்கள் பலரும் அந்த நாளில், தங்களது சொத்துக்களை பதிவு செய்ய அதிக முனைப்பு காட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று மங்களகரமான நாளாக கருதப்படுவதால், ஞாயிற்றுக் கிழமையான இன்றும், பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு, விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்படும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும், இதுதொடர்பாக சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.