விவசாயிகளிடம் இருந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், நெல் கொள்முதல் செய்கிறது. தற்போது 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால், நெல்லில் ஈரப்பத அளவு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யுமாறு வாணிப கழகத்திற்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், நடப்பு சீசனில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக திட்ட துறை செயலருக்கு, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்திய உணவு கழகத்தின் தர கட்டுப்பாட்டு அலுவலர்கள், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, நெல்லின் ஈரப்பதத்தை கண்டறிந்து, அதற்கேற்ப ஈரப்பத அளவை உயர்த்தித் தர வாய்ப்புள்ளது.