ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிடத்தக்க அளவிலான மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த மாவட்டங்கள், சில நேரங்களில் பரப்பளவில் பெரிதாக இருந்தாலோ, நிர்வாக வசதிகளுக்காகவோ பிரிக்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் முன்னர் 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இன்னொரு புதிய மாவட்டம் உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய பகுதிகளையும் இணைத்து, பழநியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.
இதுதொடர்பான கோரிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் சக்கரபாணி மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோன்று, 5 புதிய மாவட்டங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களுக்கான அறிவிப்பு, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.