தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தலைவர் விஜய், தனது கொள்கைகளையும், தனது கொள்கை தலைவர்களையும் அறிவித்தார்.
மேலும், தனது தலைமையை ஏற்று, வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்றும், சமீபத்தில் அவர் கூறியிருந்தார். இவ்வாறு இருக்க, தமிழக வெற்றிக் கழகத்துடன், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி வைக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை, இன்று சென்னையில் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு பின், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மாநில கட்சி மட்டுமல்ல, தேசிய கட்சிகளில் கூட, இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, இஸ்லாமியர்களின் பக்கம் நின்றவர் விஜய்“ என்றும், “த.வெ.கவில் இஸ்லாமியர்களுக்கு விஜய் அங்கீகாரம் அளித்து வருகிறார்” என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, “தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக, இஸ்லாமியர்களை திசை திருப்பும் திமுகவின் சித்து விளையாட்டு எடுபடாது” என்றும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.