சென்னை தியாகராயநகர் காய்கறி சந்தையில் கடந்தவாரம் 35-ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் வரை விற்பனையான நிலையில், (அக்.4) இன்று 80 ரூபாய் வரையும், தி.நகர் மார்கேட்டிற்கு வெளியே 90 ரூபாய் வரையும் தக்காளி விற்கப்படுகிறது.
அதேபோல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகர் மார்கெட்டில் 2 அல்லது 3 கிலோ தக்காளி வாங்குபவர்கள் தற்போது குறைவாகவே வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.
தக்காளி விலையைக் கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதே போன்று நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை ஏறிக்கொண்டே சென்றால் வரும் விழாக்காலங்களில் இது சற்று சிரமமாக இருக்கும் எனவும் இதற்கு ஏற்றார் போல் அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் எனவும் கோரிக்கை வைத்தனர்.