ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இனிப்புகளைப் பரிமாறியும், ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டியும் கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர், சாலைகளிலேயே நண்பர்கள் தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.
சென்னையில் சாலைகளில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்டி வந்த டூவீலர், ஃபோர் வீலர் வாகன ஓட்டிகளுக்கு ஆண், பெண் பேதமின்றி நட்புக் கயிறுகளைக் கட்டிவிட்டு, நண்பர்கள் தின வாழ்த்துகளைக் கூறி கை குலுக்கினர் சென்னை மாநகர போக்குவரத்து காவலர்கள்.
வாகன ஓட்டிகளுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி, போக்குவரத்து காவலர்கள் அவர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது தொடர்பான வீடியோவை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.இதேபோல, மதுரையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர், வாகன ஓட்டிகளை மறித்து நிறுத்தி, அவர்களுக்கு தேசியக் கொடிகளையும், இனிப்புகளையும் வழங்கி நண்பர்கள் தின வாழ்த்துத் தெரிவித்து நண்பர்கள் தினத்தைக் கொண்டாடினர்.
நண்பர்கள் தினத்தை போக்குவரத்து போலீசார் வித்தியாசமாக கொண்டாடியது வரவேற்பைப் பெற்றுள்ளது.