ஆந்திரா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 போ் உயிரிழந்தனா். மேலும் 50 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இந்த ரயில் விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், போலீஸார், மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.