சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பொன்னன் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சத்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் கல்லூரியிலும், இளைய மகன் பள்ளியில் 11-வது வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது இளைய மகனை, திருநங்கைகள் சிலர் கடத்தி சென்றுவிட்டதாகவும், தன் மகனை திருநங்கையாக மாற்றிவிட்டதாகவும், கடந்த 10-ஆம் தேதி அன்று, சத்யா புகார் அளித்தார்.
ஆனால், இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சத்யா, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திருநங்கைகள் என் மகனை கடத்தி சென்றுவிட்டார்கள். அவனை திருநங்கையாகவும் மாற்றிவிட்டார்கள். ஆனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மகனை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டோம்.
இதனால் கோபம் அடைந்த திருநங்கைகள், எங்கள் வீட்டிற்கு வந்து, என் மகனை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
மகனை கொடுக்க முடியாது என்று சொன்னால், ரூபாய் 5 லட்சம் பணத்தையாவது தர வேண்டும் என்று அவர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.