மேற்கு வங்க மாநிலத்தில், மதிய உணவு திட்டத்தை, மத்திய கல்வி அமைச்சகத்தின் கள ஆய்வுக் குழு சோதனை செய்தது. அதில், 7 சமையல் உதவியாளர்களுக்கு, 5 பேருக்கு வழங்கப்படும் சம்பளம் சரிசமமாக பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது.
இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது, சம்பள முறைகேடு குறித்து பேசிய அவர், “ஐந்து கணவர்கள் கூட ஒரே மனைவியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்பதுதான் இந்திய கலாசாரம்” என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசியது, அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டமன்ற உறுப்பினர் மதன் மிஸ்ராவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் அக்னி மித்ரா பால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பெண்கள் மீது எந்த மரியாதையும் வைக்கவில்லை என்பதற்கு இதுவே சான்று என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த கட்சியை சேர்ந்த பலர், பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்படுவதற்கும் இதுதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு பலமான பதிலடி பாஜக சார்பில் கொடுத்த பிறகும், திரிணாமுல் காங்கிரஸ் தரப்பிடமிருந்து, எந்தவொரு பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.