அண்ணா பல்கலைக்கழக மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி, சீமான், அண்ணாமலை உள்ளிட்டோர், அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று கடிதம் ஒன்றை எழுதி, அதனை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பக்கத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, தமிழக அரசிடம் முறையிட்டு, எந்த பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் காலையில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, அண்ணா பல்கலைக்கழக சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை, ஆளுநரிடம் விஜய் வழங்கியுள்ளாராம்.
இதற்கிடையே, கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அறிக்கை ன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்” என்றும், “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றும், “பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படவில்லை. தமிழக அரசு கேட்கும் நிதியை, ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும்” என்றும், ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.